கார்த்திகை தீப திருநாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா

Darshan Tech Solution


5. கார்த்திகை தீப திருநாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?


  கார்த்திகை திருநாளில் சிவ ஆலயத்திலும் முருகன் ஆலயங்களிலும் சொக்கப்பனை கொளுத்துவார்கள். சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவனுக்கு சொக்கன் என்ற பெயரும் உள்ளதால் சொக்கப்பனை என்ற சொல் ஏற்பட்டது.




  கற்பக தருவான பனை மரம் கல்பதரு என்றழைக்கப்படுவது. தேவமரம் என்றும் அழைக்கப்படுவது. பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றது. வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு.

  பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது. பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சுவர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது

  பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து அதனை ஏற்றுவதால் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.





 பனை ஓலைகள் கூரை வேய, ஓலையின் அடிக்காம்புகள் நார் எடுக்க, நுங்கு, பனம்பழம் உணவாக, பனைமரத்தின் பாளையை வெட்டினால் பதநீர்... இப்படி பனையின் அனைத்து பாகங்களும் நமக்குப் பயன்படுவதால், இதை "பூலோகக் கற்பகவிருட்சம்" என்று சிறப்பிப்பார்கள்.

  பனையில் தாலி, கல்பனை, தாடகை எனப் பலவகைகள் உள்ளன.

பல திருத்தலங்களின் ஸ்தல விருட்சமாகவும் திகழ்கிறது பனை. திருப்பனந்தாள், வன்பார்த்தான் பனங்காட்டூர், பனையபுரம், திருவோத்தூர் ஆகிய தலங்களை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். "கன்றாப்பூர்" எனும் தலத்தில் கல்பனை தலமரமாக உள்ளது என்பார்கள்.

  திருவோத்தூர் தொண்டைநாட்டு சிவத்தலம். இங்கே, சிவபெருமானுக்குப் பனம் பழங்களைப் படைக்க விரும்பிய அடியார் ஒருவர் பனைமரங்களை நட்டுவைத்தார். ஆனால், அவை யாவும் ஆண் மரங்களாக இருந்ததால் காய்க்காமல் போயின. பின்னர் அவ்வூருக்கு வந்த திருஞான சம்பந்தர், "பூர்த்தேர்ந் தாயென" எனும் பதிகம் பாடி சிவபெருமானைத் துதிக்க, ஆண் பனைகள் பெண் பனைகளாகி பூத்துக் காய்த்துக் கனிந்து கனிகளை உதிர்த்தன என்கிறது தல வரலாறு.

  "கூந்தற்பனை" என்றொரு வகை உண்டு. இதன் பாளைகள் பெண்களின் கூந்தலைப் போன்று சடை சடையாகத் தொங்குமாம். பார்ப்பதற்கு மிக அழகான இந்தப் பாளைகளைத் தோரணம்கட்டப் பயன்படுத்துவார்கள்.

  "தாடகை" என்பதும் பனைவகைகளில் ஒன்று. தென் மாவட்டங்களில் இவ்வகைப் பனை அதிகம் உண்டு. தெய்வாம்சம் மிகுந்ததாகக் கருதப்பட்ட இந்த மரத்தின் பெயரை பெண்பிள்ளைகளுக்குச் சூட்டும் வழக்கமும் உண்டாம். ராவணனின் சகோதரிக்கு, "தாடகை" என்று பெயர். தாடகை மரங்கள் நிறைந்த தாடகை மலையில் பிறந்து வளர்ந்ததால், அவளுக்கு "தாடகை" என்று பெயர் வந்ததாகத் தகவல் உண்டு.

 திருப்பனந்தாள் எனும் ஊர் பிரசித்திப்பெற்ற சிவத்தலம். இங்கே பனங்காட்டின் மத்தியில் அமைந்த சிவாலயம், "தாடகேச்சுவரம்" எனச் சிறப்பிக்கப்பட்டது. இங்கே சிவனாரை வழிபட்ட தாடகை என்ற பெண்ணுக்காக, அவள் சூடிய மாலையை சிவனார் தலைகுனிந்து ஏற்றதாக திருக்கதை உண்டு. அவரே, பிற்காலத்தில் குங்கிலியக்கலய நாயனாரின் பக்தியை ஏற்று தலைநிமிர்ந்தாராம்.




  திருக்கார்த்திகை தினத்தில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன் வெட்டவெளியில் நடுவார்கள். அதைச் சுற்றி பனை ஓலைகளைப் பிணைத்துக் கட்டி, உயரமான கூம்பு போன்ற அமைப்பை உருவாக்குவார்கள். மாலை வேளையில் இந்தப் பனைக்கூம்பின் முன் ஸ்வாமி எழுந்தருள்வார். சில கோயில்களில் அம்பாளும் ஸ்வாமியும் எழுந்தருள்வார்கள். சில கோயில்களில் பஞ்சமூர்த்திகள் (விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர்) எழுந்தருள்வார்கள். அவர்களுக்கு தீபாராதனை முடிந்ததும், சொக்கப்பனை கொளுத்தப்படும்.

  கொழுந்துவிட்டு எரியும் அந்த ஜோதியை சிவமாகவே எண்ணி வழிபடுவார்கள். சுமார் முப்பது, முப்பத்தைந்து அடி உயரத்துக்கு (முழுப் பனையையே சொக்கப்பனைக்குப் பயன்படுத்துவார்களாம்) அமைக்கப்படும் சொக்கப்பனை எங்கள் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலின் தனிச்சிறப்பு என்றார் அவர்.

  சில ஊர்களில், சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை தைலத்துடன் சேர்த்து ரட்சையாக, காப்பாக பூசிக் கொள்வார்கள். சாம்பலை எடுத்துச் சென்று வயற்காடுகளிலும் தூவுவார்கள். இதனால் அந்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

Follow Me on Social Media: WhatsApp | Youtube | Facebook | Telegram

No comments:

Post a Comment

Darshan Tech Solution - Information

Home | Online Services | Daily One Info ...